‘மனுஷி’ பட காட்சிகள் நீக்கம், மாற்றம்: சென்சாருக்கு மறுவிண்ணப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கி, மாற்றியமைத்து, சென்சார் போர்டுக்கு மறுவிண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்த பின் இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்திரைப்படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
37 காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆட்சேபகரமானவை எனக் குறிப்பிட்டு, சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகஸ்ட் 24-ஆம் தேதி படத்தை நேரில் பார்த்தார். இன்று வெளியிடப்பட்ட உத்தரவில், கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம் போன்றவை குறித்த வெளிப்படையான உரையாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்சார் போர்டு நீக்க பரிந்துரைத்த சில காட்சிகள் அவ்வாறே நீக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சிலவற்றை மட்டும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். அதன்படி, படக்குழு சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கி, மாற்றியமைத்து இரண்டு வாரங்களில் சென்சார் போர்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் கிடைத்த பின், சென்சார் போர்டு இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது