“எந்த பிறப்பில் பார்க்கப் போகிறோம்” – ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ இயக்குநர் மறைவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல்
‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 60.
1990-களில் சன் டிவியில் பிரபலமான நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ அப்போதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்தனர். ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார், இது அவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பாக அமைந்தது.
இத்தொடரின் இயக்குநர் எஸ்.என். சக்திவேல், 2015-ல் வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தையும், பின்னர் ‘பட்ஜெட் குடும்பம்’ என்ற சீரியலையும் இயக்கியவர்.
எஸ்.என். சக்திவேல் மறைவுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்து, “எஸ்.என். சக்திவேல் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நலம். ‘பட்டாபி’ கதாபாத்திரத்தின் மூலம் தமிழக மக்களிடையே எனக்கு பெயர் கிடைத்தது. இன்று அதிகாலை அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும். இனிமேல் எந்த பிறப்பில் பார்க்கப் போகிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி” என்றார்.