16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றாகும் ‘சிவா மனசுல சக்தி’ குழு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் எம். ராஜேஷ் – நடிகர் ஜீவா – இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.
எம். ராஜேஷின் முதல் இயக்குநர் முயற்சியாக வெளிவந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்த படம் வெற்றிபெற்றதோடு, யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் இன்னமும் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளன.
இப்போது, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேஷ் – ஜீவா – யுவன் மூவரும் மீண்டும் கைகோர்க்கிறார்கள்.
தற்போது ஜீவாவுடன் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ராஜேஷின் முந்தைய படங்களைப் போலவே, இத்திரைப்படமும் முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.