“சொன்னதைச் செயலால் காட்டினார் போபோ சசி” – இசையமைப்பாளர் முரளி பெருமிதம்

இசை அமைப்பாளர் போபோ சசி உருவாக்கிய Before I Fade இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. யூகி பிரவீண் இயக்கத்தில், அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவில், இனாரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பத்மநாபன் தயாரித்திருந்தார்.

விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி, சத்யா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ஹரி கிருஷ்ணன், பாடகர் ஹைடு கார்த்திக், ராப் பாடகி ஐ.கே. பெர்ரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது இசையமைப்பாளர் சபேஷ் முரளி உணர்ச்சியுடன் பேசும்போது,

“நான் இளையராஜாவுக்கும், அண்ணன் தேவாவுக்கும் கீபோர்டு பிளேயராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில், இரவு நேரம் வீட்டுக்கு வந்து அதிகாலையிலேயே வெளியேறிவிடுவேன். அப்போது என் மகன் சசி ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

ஒருநாள் காலை என் அறையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், ‘அன்புள்ள அப்பாவுக்கு, உங்கள் மகன் சசி எழுதுவது இது. எனக்கு இசையில் ஆர்வம் உள்ளது. நீங்கள் இசையை நேசிக்கும் அளவுக்கே, எனக்கும் அதே பற்று இருக்கிறது. என் படிப்புக்காகச் செலவிடும் தொகையின் பாதியை, இசை கற்கவும் இசைக் கருவி வாங்கவும் செலவிடுங்கள். நான் ஒரு நாள் பெரிய இசையமைப்பாளராக வளரும்’ என்று எழுதியிருந்தான்.

இன்று அவன் அந்தக் கனவை நிஜமாக்கிவிட்டான். யாரும் இசையமைப்பாளராக முடியும். ஆனால் சசியின் ஒலி அமைப்புகள் வேறுபட்டவை. புதுமையான சத்தங்களை உருவாக்குகிறான். அதுதான் எனக்குப் பிடித்தது,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Facebook Comments Box