“அவனா இவன்?” – கண்ணாடிக்கும் கட்-அவுட் வைத்த சினிமா விளம்பரம்!

குழந்தை நடிகராகத் துவங்கி, பின்னர் இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தியவர் வீணை எஸ். பாலசந்தர். ஹாலிவுட் பாணியில் அவர் இயக்கி, நடித்த “அந்த நாள்” இன்று வரை தமிழ் திரையுலகின் சிறந்த மிஸ்டிரி-த்ரில்லர் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதேபோல், “எ பிளேஸ் இன் த சன்” என்ற அமெரிக்க திரைப்படத்தின் பாதிப்பில் உருவான தமிழ்ப் படம் தான் “அவனா இவன்?”

உண்மை சம்பவத்திலிருந்து சினிமாவுக்கு

1900களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் நடந்த “ஜில்லெட்” கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நியூயார்க் நகரில் ஆடை தொழிற்சாலை உரிமையாளரின் உறவினர், அங்கு பணிபுரியும் பெண்ணை காதலித்து, திருமணம் செய்வேன் என்று நம்பவைத்து பயன்படுத்துகிறார். கர்ப்பமாகும் அந்தப் பெண்ணைத் துறந்து, செல்வந்தக் குடும்பப் பெண்ணைத் திருமணம் செய்ய திட்டமிடுகிறார். இதற்காக, அந்த ஏழைப் பெண்ணை ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, படகு சவாரி நடத்தியபோது கொலை செய்து ஆற்றில் தள்ளிவிடுகிறார். விபத்தாக காட்ட முயன்றும், போலீசார் விசாரணையில் உண்மையை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தியோடர் டிரைசர் எழுதிய “An American Tragedy” நாவலாகவும், பின்னர் “A Place in the Sun” என்ற ஹாலிவுட் படமாகவும் வந்தது. அதையே அடிப்படையாகக் கொண்டு தமிழில் எஸ். பாலசந்தர் “அவனா இவன்?” என்ற படத்தை இயக்கினார்.

படத்தின் விபரம்

இத்திரைப்படத்தில் பாலசந்தர் இயக்கியதோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாக நடித்தும், இசையமைத்தும், தயாரித்தும் இருந்தார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “எஸ்.பி. கிரியேஷன்ஸ்” என்று பெயரிட்டார். (திரைப்பட நிறுவனத்தின் பெயரில் “கிரியேஷன்ஸ்” என்ற சொல் முதன்முதலில் இவரால்தான் பயன்படுத்தப்பட்டது).

வசந்தி நாயகியாக நடித்திருந்தார். ஜாவர் சீதாராமன், குட்டி பத்மினி, மாஸ்டர் ஸ்ரீதர், வி.எஸ். ராகவன், சி.கே. சரஸ்வதி உள்ளிட்ட பலரும் நடித்தனர். கதையில், பாலசந்தர் தனது மனைவி (லட்சுமி ராஜம்)யைக் கொன்று விட்டு, வசந்தியைக் கல்யாணம் செய்வதாகக் காட்டப்படுகிறது. சுற்றுலா வரும் இரண்டு குழந்தைகள் (குட்டி பத்மினி, மாஸ்டர் ஸ்ரீதர்) கொலைக்காட்சியைப் பார்த்து, பின்னர் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுகிறார்கள்.

பாடல்கள் மற்றும் பிரசாரம்

படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றன. அதில் “கல்யாண பொண்ணு கலங்காதே கண்ணு” என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும்போது, வெற்றுக் காசோலைகளை அனுப்பி, அவர்கள் விருப்பப்படி தொகையை நிரப்பிக் கொள்ளச் சொன்னாராம் பாலசந்தர்!

பட விளம்பரமும் தனித்துவமாக நடந்தது. சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பிரபல உணவகத்துக்கு எதிரே ஹீரோவுக்கான பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது. அதோடு, அவர் அணிந்திருந்த கருப்பு கண்ணாடிக்கும் தனியே கட்-அவுட்! அதில் ஒரு லென்ஸில் “அவனா”, மறுபுற லென்ஸில் “இவன்” என்று எழுதி மக்கள் கவனத்தை ஈர்த்தனர். அந்நாளில் இது பெரும் பேச்சுப் பொருளாக இருந்தது.

வெளியீடு

1962 ஆகஸ்ட் 31 அன்று வெளியான இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும், வசூலில் அதிக வெற்றி பெறவில்லை.

Facebook Comments Box