நடிகர் சவுபின் சாஹிருக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகர் சவுபின் சாஹிர். பின்னர் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தின் வெற்றியால் பல்வேறு மொழிப் பார்வையாளர்களிடமும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து அவர் தயாரித்திருந்தார்.
ஆனால், இந்தப் படத்துக்காக தாம் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், லாபத்தில் 40% பங்கீடு வழங்குவதாகக் கூறி பின்னர் ஏமாற்றப்பட்டதாகவும், கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சவுபின் சாஹிர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை பெற்றார்.
இதனிடையே, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி துபாயில் நடைபெறும் விருது விழாவில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு, எர்ணாகுளம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் முக்கிய சாட்சி தற்போது வெளிநாட்டில் இருப்பதால், சவுபின் சாஹிருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்று, நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்து, துபாய் பயணத்திற்கு தடை விதித்தது.