‘லோகா’ படக்குழு சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கம்

‘லோகா’ படத்தின் தயாரிப்பாளர்கள் சர்ச்சையை ஏற்படுத்திய வசனத்தை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு அவர்கள் மனமார்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

துல்கர் சல்மான் தயாரித்த ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படத்தில் நடன இயக்குநர் சாண்டி கூறிய ஒரு வசனம் கன்னட மக்களின் உணர்வுகளை பாதித்தது. இதனால் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்திற்கு பின், அந்த வசனத்தை நீக்கி, படக்குழு வருத்தம் தெரிவித்தது.

வேஃபாரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் அறிக்கை கூறியது:

“எங்கள் ‘லோகா: சாப்டர் 1’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் கூறிய உரையாடல் கர்நாடக மக்களின் உணர்வுகளை தவறுதலாக பாதித்துவிட்டது என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மக்களின் உணர்வுகள் எங்களுக்கு மிக முக்கியம். ஆகவே இந்த தவறை மிகுந்த வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறோம். மேலும், எந்தவொரு பகைமையோ குற்றமோ இல்லாமல் இந்த உரையாடல் இடம்பெற்றது என்பதை அறியத்தருகிறோம். அந்த உரையாடல் விரைவில் நீக்கப்படும். இதற்காக மனமார்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்” என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருங்காலத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box