குறைந்த செலவில் உலக தரத்தில் சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கும் மலையாள சினிமா!

சூப்பர் ஹீரோ மற்றும் ஃபேண்டசி கதைகள் உலகம் முழுவதும் எப்போதுமே சிறப்பான வரவேற்பைப் பெற்றவை. சாதாரண மனிதரால் செய்ய இயலாத காரியங்களை, அசாதாரண சக்திகளைக் கொண்ட ஒருவன் செய்துகாட்டுவதை திரையில் பார்ப்பது தனித்துவமான சுவாரசியம் தருகிறது. ஹாலிவுட் பல தசாப்தங்களாக காமிக்ஸ் வழியே அறிமுகமான சூப்பர் ஹீரோக்களை இன்று வரை உயிரோடு வைத்திருக்கிறது.

அமெரிக்காவின் டிசி, மார்வெல் காமிக்ஸ்கள் மூலம் உருவான சூப்பர் மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற பாத்திரங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதன்பின் அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, வோல்வரின், டெட்பூல் போன்ற ஹீரோக்கள் இந்தியாவிலும் அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்றனர்.

இந்தியாவில் கூட சூப்பர் ஹீரோ காமிக்ஸ் 80களிலிருந்தே பிரபலமாக இருந்தன. நாகராஜ், டோகா, சூப்பர் கமாண்டோ துருவா போன்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களும், 90களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சக்திமானும் மக்கள் மனதில் இருந்தனர். ஆனால் அவற்றை பெரிய திரையில் காட்சிப்படுத்தும் முயற்சி வெற்றிகரமாக நடக்கவில்லை. சோனி நிறுவனம் சக்திமான் கதைப்படி ஒரு முழுநீள படம் எடுக்கத் திட்டமிட்டாலும் அது நிறைவேறவில்லை.

ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘க்ரிஷ்’ இந்திய சூப்பர் ஹீரோ படங்களில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ‘க்ரிஷ் 3’ நல்ல வரவேற்பு பெற்றாலும் அதன் தொடர்ச்சி முயற்சி செய்யப்படவில்லை. அதேபோல் தென்னிந்தியாவில் தமிழில் ‘முகமூடி’, ‘கந்தசாமி’, ‘ஹீரோ’, ‘வீரன்’, ‘மாவீரன்’ போன்ற சில முயற்சிகள் நடந்தாலும் பெரிதாகச் செல்வாக்கை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு பேசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்த ‘மின்னல் முரளி’ உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. கொரோனா காலத்தில் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்ததால் சர்வதேச பார்வையாளர்களையும் சென்றடைந்தது. மின்னல் தாக்கத்தால் அசாதாரண சக்திகளைப் பெறும் ஒருவன், அதற்கு எதிரான வில்லன் – இந்த எளிய கதைக்களத்தைக் கொண்டு பேசில் ஜோசப் கவர்ச்சியான திரைக்கதை வடித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் நாட்டுப்புற அடையாளம். கேரள சினிமாவின் நெஞ்சோடு ஒட்டியிருக்கும் “நேட்டிவிட்டி”யை சூப்பர் ஹீரோ கதையிலும் பேணி வந்தது சிறப்பானது. அதற்குப் பிறகு ரசிகர்கள் தொடர்ந்து ‘மின்னல் முரளி 2’ குறித்து கேட்டு வருகின்றனர்.

இதே வரிசையில், சமீபத்தில் வெளிவந்த ‘லோகா: சாப்டர் 1’ மலையாள சூப்பர் ஹீரோ படம் வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி பெற்றுள்ளது. கேரளாவின் தொன்மக் கதைகளில் வரும் பாத்திரங்களை நவீன முறையில் மாற்றி, ஒரு பெண் சூப்பர் ஹீரோவை உருவாக்கியிருப்பது தனிச்சிறப்பு. வலுவான பின்னணி, வலிமையான வில்லன், நாட்டார் கதைகளை இணைத்து மார்வெல் பாணியில் கேமியோ காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

‘டிராகுலா’ முதல் ‘ட்விலைட்’, ‘சின்னர்ஸ்’ வரை ஹாலிவுட் கசக்கிப் பிழிந்த வேம்பயர் கதைகளை, இந்திய பார்வையாளர்களுக்குத் தகுந்தவாறு ‘யட்சி’ எனப் புதிய வடிவில் தருவது புத்திசாலித்தனமான முயற்சி.

இந்தியாவின் பல மொழிச் சினிமாக்கள் பான்–இந்தியா ஆக்ஷன் படங்களுக்கு நூறு கோடிகள் செலவழித்து கொண்டிருக்கும் வேளையில், மலையாள சினிமா குறைந்த செலவிலேயே உலக தரத்தில் சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கி வருகிறது. ‘மின்னல் முரளி’ பட்ஜெட் ரூ.18 கோடிதான்; ‘லோகா’ பட்ஜெட் ரூ.30 கோடிதான். ஆனால் தரத்தில் ஹாலிவுட் படங்களுக்குச் சமமாகவே இருக்கின்றன.

சாத்தன், அவரது 389 உடன்பிறப்புகள், மாடன் போன்ற நாட்டார் கதைப்பாத்திரங்களின் பிணைப்புகளும், முழு படத்துக்கும் காமிக்ஸ் புத்தகம் வாசிப்பதுபோல ஒரு அனுபவத்தையும் தருகிறது. வன்முறையையும் சண்டையையும் மட்டுமே நம்பாமல், கேரள மக்களின் வாழ்வியலைச் சுற்றி கதாபாத்திரங்களை உருவாக்கி, ஒரு தனி யுனிவர்ஸ் நோக்கி செல்கிறது மலையாள சினிமா.

Facebook Comments Box