விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப் போவது விஷ்ணு எடவனா?
அடுத்ததாக நடிகர் விக்ரமுடன் பணியாற்றவிருக்கும் இயக்குநர் விஷ்ணு எடவன் என்கிற தகவல் திரையுலகில் பரவுகிறது.
முன்னதாக, விக்ரம் நடிக்க மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் படங்கள் தயாராகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவை முன்னேறாமல் நிறுத்தப்பட்டதால், விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது குறித்து குழப்பம் நிலவியது.
இந்நிலையில், விக்ரமின் அடுத்தப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பாடலாசிரியராகவும், லோகேஷ் கனகராஜ் படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் விஷ்ணு எடவனுக்கு உள்ளது.
அவரது இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிக்கும் புதிய படம் தொடங்கப்பட்டிருந்தாலும், அதன் படப்பிடிப்பு நடுப்பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ‘எல்.ஐ.கே’ திரைப்படம் முடிந்தவுடன் தயாரிப்பாளர் லலித்குமார் அந்தப் படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் குறுகிய காலத்தில் முடிக்கக்கூடிய விக்ரம் படத்தை முதலில் செய்து முடித்து, பின்னர் கவின் படத்தைத் தொடங்க விஷ்ணு எடவன் யோசித்து வருகிறார். இந்த புதிய கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.