ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பை ஏற்ற இன்பன் உதயநிதி – தனுஷின் வாழ்த்து

தனுஷ் இயக்கியும், நடித்தும் இருக்கும் இட்லி கடை திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் பொறுப்பை உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி ஏற்றுள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து தனுஷ் தனது சமூக வலைதளத்தில்,

“தமிழ்நாடு முழுவதும் இட்லி கடை படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இன்பன் உதயநிதி தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவு செய்துள்ளார்.

கலைஞர் டிவி, இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது. அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது அந்த பொறுப்பை அவரது மகன் இன்பன் ஏற்றுள்ளார்.

Facebook Comments Box