மதராஸி: திரைப்பட விமர்சனம்
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊடுருவச் செய்ய, வடஇந்தியாவைச் சேர்ந்த விராட் (வித்யுத் ஜம்வால்), சிராக் (சபீர் கல்லரக்கல்) தலைமையிலான கும்பல் திட்டமிடுகிறது. இதைத் தடுக்க, தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) பிரேம் (பிஜூ மேனன்) தலைமையிலான குழு முயற்சி எடுக்கிறது. இதே வேளையில், காதல் சிக்கலால் தற்கொலைக்கு முயன்ற ரகு (சிவகார்த்திகேயன்) இந்தச் சிக்கலுக்குள் சிக்கிக் கொள்கிறார்.
NIA குழு, ரகுவின் உயிரை பணயம் வைத்து கடத்தல் கும்பலை அழிக்க திட்டமிடுகிறது. ஆனால், ரகுவின் காதலி மாலதி (ருக்மணி வசந்த்) கடத்தப்பட்டதும் கதை திருப்பம் பெறுகிறது. காதலியை மீட்க ரகு எவ்வாறு போராடுகிறார்? துப்பாக்கி கும்பலை அழிக்கிறார்களா, இல்லையா என்பது திரைக்கதையின் மையம்.
ஏ.ஆர். முருகதாஸ், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் இது. வேகமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களை கவர்ந்தவர், இங்கேயும் அதையே தொடர்ந்துள்ளார். துப்பாக்கி கலாச்சாரத்தை பரப்ப முயலும் கும்பல் ஒருபுறமும், யார் ரத்தம் சிந்தினாலும் அவர்களுக்கு துணை நிற்கும் நாயகன் மறுபுறமும் மோதும் கதை, இரண்டு மணி முக்கால் நேரம் முழுவதும் சலிப்பில்லாமல் நகர்கிறது.