திரையரங்குகளில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க முடியவில்லை: நடிகர் பாலா கவலை
திரையரங்குகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்க முடியாமல் சிரமப்பட்டதாக நடிகர் பாலா தெரிவித்தார்.
ஷெரிஃப் இயக்கத்தில், பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா போன்றோர் நடிப்பில் வெளியான படம் ‘காந்தி கண்ணாடி’. இந்தப் படத்தினூடாக பாலா திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். இதனால் அவரது நண்பர்கள் படத்தை பார்த்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
‘காந்தி கண்ணாடி’ படத்தின் முதல் காட்சியை படக்குழுவுடன் இணைந்து ராகவா லாரன்ஸும் பார்த்தார். அதன்பிறகு, பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலா கூறியது:
“படம் வெளியாகும் 3 நாட்கள் முன்பு மிகக் கஷ்டமான நிலை. பல திரையரங்குகளில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்க முடியவில்லை. மக்கள் திரையரங்கு வந்து ‘காந்தி கண்ணாடி ஓடவில்லை போல’ என்று நினைத்துச் செல்கிறார்கள். அனைத்து தடைகளையும் கடந்து படம் வெளியாகியுள்ளது. இன்று மக்களிடையே படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு தமிழக மக்களுக்கு நன்றி. லாரன்ஸ் சார் ‘நீ ஹீரோ’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். திரையில் என்னை பார்க்கும் போது அவர் என்ன சொல்வார் தெரியவில்லை,” என்று பாலா தெரிவித்தார்.