ரூ.150 கோடி வசூல் நோக்கி பாயும் ‘லோகா!’

கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படம் வசூலில் புதிய சாதனையை எட்டிக் கொண்டிருக்கிறது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக தோன்றியுள்ளார். மேலும், ‘பிரேமலு’ புகழ் நஸ்லன், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி செய்துள்ளதுடன், இசையை ஜேக்ஸ் பீஜாய் வழங்கியுள்ளார்.

மோகன்லாலின் ‘ஹ்ருதயபூர்வம்’, ஃபகத் பாசிலின் ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்களுடன் ஒரே நாளில் வெளியானாலும், ‘லோகா’ படம் ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் 250 திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பு காரணமாக அடுத்த நாளிலிருந்து 325 திரையரங்குகளுக்கு உயர்த்தப்பட்டது. பின்னர் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் கூட திரைகள் அதிகரிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான ‘லோகா’, வெறும் 9 நாட்களில் ரூ.130 கோடியைத் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளது. சினிமா விமர்சகர்கள் கூறுவதன்படி, இந்த வார இறுதிக்குள் படம் ரூ.150 கோடியைத் தொட்டு விடும், மேலும் விரைவில் ரூ.200 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box