இணையத்தில் வைரலான ராஜமவுலி புதிய பட காட்சி!
‘ஆர்ஆர்ஆர்’ பட வெற்றிக்குப் பின், மகேஷ்பாபுவை நாயகனாக கொண்டு ஒரு பன்னாட்டு தரத்தில் உருவாகி வரும் அதிரடி-சாகசப் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படம் ‘இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் உலகம் முழுவதும் பரவும் அட்வென்சர் கதையாக உருவாகிறது. காசி பின்னணியில் சில முக்கியக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகேஷ்பாபுவின் கதாபாத்திரம் ஹனுமனை நினைவூட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கென்யாவின் காடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் முன்பே தெரிவித்துள்ளார்.
அதன்படி, சமீபத்தில் கென்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பில், ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முசாலியா முடவாடி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை கென்ய அமைச்சர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், கென்யா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு காட்சி இணையத்தில் கசிந்துள்ளது. அதில், சிங்கத்தின் முன்னால் மகேஷ்பாபு நிற்பது போல் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்றிருந்தாலும், இப்படிக் கசிந்திருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு முன்பும், ஒடிசாவில் நடந்த படப்பிடிப்பில் சில காட்சிகள் வெளியேறியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.