“மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்து 10 நாட்கள் ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” – முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்து 10 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் அவர் எழுதியதாவது:
“என் பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும். அன்புள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களே, சென்னை காவல் ஆணையரிடம் நான் புகார் அளித்து பத்து நாட்கள் ஆகின்றன. பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ், என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கினார். தற்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.
நிறைமாத கர்ப்ப நிலையில், பார்வையற்ற என் தாயுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கே நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை. இதற்கிடையில் ரங்கராஜ், விசேஷ சலுகைகள் பெற்று வருகிறார். மேலும் அவர் எனக்கு எதிராக ஆபாசமான, அநாகரீகமான சமூக ஊடக பிரச்சாரங்களை நடத்துகிறார்.
முதல்வரே, நாங்கள் பெண்கள் உங்கள் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். பிரபலங்களோ, விஐபிகளோ பெண்களுக்கு எதிராக குற்றம் செய்துவிட்டு எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக நடமாட முடியுமா? என் குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்.” என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தனது திருமணப் புகைப்படங்களை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, ஆறு மாத கர்ப்பிணி என அறிவித்திருந்தார். ஆனால் ரங்கராஜ் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்; அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தன்னை தாக்கியதாகவும், தன்னுடன் வாழ மறுப்பதாகவும் கூறி, ஜாய் கிரிசில்டா சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.