ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகை பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில், ஒரு முழம் மல்லிகை பூ எடுத்துச் சென்றதற்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில மலையாளிகள் சங்கம் சார்பில் கடந்த 6-ஆம் தேதி மெல்போர்னில் நடந்த ஓணம் விழாவில், சிறப்பு விருந்தினராக நவ்யா நாயர் கலந்து கொண்டார்.
அதற்காக மெல்போர்னுக்கு விமானத்தில் சென்ற அவர், கைப்பையில் ஒரு முழம் மல்லிகை பூ வைத்திருந்தார். அங்கு சோதனையின்போது அது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நாட்டின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டது.
இதைப் பற்றி நவ்யா நாயர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: “என் அப்பா இரண்டு முழம் மல்லிகை வாங்கி, அதில் ஒரு பகுதியை எனக்குத் தந்தார். கொச்சியிலிருந்து சிங்கப்பூர், அங்கிருந்து மெல்போர்னுக்கு பயணிக்கும் போது அதை சூடிக்கொண்டேன். ஆனால் மெல்போர்ன் விமான நிலைய சோதனையில் அது கண்டுபிடிக்கப்பட்டதால், விதிகளின்படி ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 28 நாட்களுக்குள் அந்தத் தொகையை செலுத்த வேண்டும் என கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.