‘கூலி’ படத்தில் நடித்தது தவறு என ஆமீர்கான் கூறினார் என்ற தகவலுக்கு அதிகாரப்பூர்வ மறுப்பு
‘கூலி’ படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என ஆமீர்கான் கருத்து தெரிவித்துள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அதற்கு அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் வழங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில், ஆமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். படம் வெற்றிகரமாக ஓடியபோதும், ஆமீர்கானின் கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, அவர் நடித்த கேரக்டர் ரோலக்ஸ் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தவில்லை என்று கிண்டல் பதிவுகள் அதிகமாக வந்தன.
இதற்கிடையில், ஆமீர்கான் பேசியதாக கூறப்படும் ஒரு பேட்டி இணையத்தில் வைரலானது. அதில், “ரஜினி சார் வேண்டுகோளுக்காகவே ‘கூலி’ படத்தில் நடித்தேன். உண்மையைச் சொல்லப் போனால், என்னுடைய கதாபாத்திரத்தின் நோக்கம் எனக்கே புரியவில்லை. அந்தப் படத்தில் நடித்தது ஒரு பெரிய தவறு” என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்த தகவல் தவறானது என ஆமீர்கானின் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர்,
“ஆமீர்கான் எந்த ஊடகத்துக்கும் இப்படிப்பட்ட பேட்டி அளிக்கவில்லை. ‘கூலி’ குறித்து அவர் எந்தவிதமான எதிர்மறை கருத்தையும் கூறியதில்லை. ரஜினிகாந்த், லோகேஷ் மற்றும் முழுப் படக்குழுவினரையும் அவர் மதிக்கிறார். மேலும், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ₹500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.