“சிறுவயதில் இட்லி சாப்பிட காசே இருக்காது” – ‘இட்லி கடை’ பட இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசிய தனுஷ்

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், அருண்விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தனுஷ், தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

“என் சிறுவயதில் எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருந்தது. தினமும் அங்கே போய் இட்லி சாப்பிட வேண்டும் என்பதே என் ஆசை. அந்த இட்லி கடை என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அப்போது என் கையில் காசு இருக்காது.

காலை வயலில் பூ பறிக்கச் செல்வோம். எவ்வளவு பூ பறிக்கிறோமோ அதற்கேற்ப காசு தருவார்கள். நான், என் அக்கா இருவரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து வயலுக்கு சென்று இரண்டு மணி நேரம் தொடர்ந்து பறிப்போம். அப்படி செய்தால் தலா இரண்டு ரூபாய் கிடைக்கும். அந்த இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தோட்டத்தில் முதலில் குளித்து விட்டு, பிறகு அந்த கடைக்குச் சென்று 4 இட்லி வாங்கி சாப்பிடுவோம்.

அப்படி உழைத்து சாப்பிட்ட இட்லியின் சுவை, மனநிம்மதி, சந்தோஷம் — பெரிய ஹோட்டல்களிலும் எனக்கு கிடைக்கவில்லை. அந்த நினைவிலிருந்தே ‘இட்லி கடை’ என்ற கதை உருவானது. வெறும் இட்லி கடை மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தில் சந்தித்த சில உண்மை மனிதர்கள், பிறகு சென்னை வந்தபின் எனக்கு பாதிப்பை ஏற்படுத்திய சில கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்பனையுடன் எழுதியதே இந்த படம்,” என தனுஷ் உருக்கமாகப் பேசியார்.

Facebook Comments Box