வேடன், அறிவு குரலில் வெளியான பைசன் காளமாடன் படத்தின் ‘றெக்க றெக்க’ பாடல்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் படத்தின் இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ராப் இசைப் பாடகர்கள் வேடன் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.
‘மாமன்னன்’ திரைப்படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் பைசன் காளமாடன். இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு பணியாற்றியுள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. கடந்த 1-ஆம் தேதி வெளியான முதல் பாடல் ‘தீக்கொளுத்தி’, தற்போது வரை சுமார் 8.3 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது பாடலான ‘றெக்க றெக்க’ வெளியாகியுள்ளது. இந்த பாடலை அறிவு மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து எழுதியுள்ளனர். பாடல் ரன் டைம் சுமார் 5.49 நிமிடங்கள் ஆகும்.
உத்வேகம் மற்றும் நம்பிக்கையை ஊட்டும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ளன. இதை கேட்டு ரசித்த ரசிகர்கள், “வேடன் மற்றும் அறிவு இணைந்து பாடியது சரியான தேர்வு” என சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.