‘காந்தாரா சாப்டர் 1’ சங்கல்ப போஸ்டர் விவகாரம் – ரிஷப் ஷெட்டி விளக்கம்
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் நேற்று அனைத்து மொழிகளிலும் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், இணையத்தில் வைரலான ஒரு போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது.
அந்த போஸ்டரில், “காந்தாரா சங்கல்பம்” என்ற பெயரில், படத்தைப் பார்ப்பதற்கு முன் பார்வையாளர்கள் மூன்று விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது – மது அருந்தக் கூடாது, புகைப்பிடிக்கக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது. இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் வரை இந்த மூன்று காரியங்களையும் செய்யக்கூடாது எனவும், இதற்கான சான்றிதழ் பெற கூகுள் படிவம் இணைக்கப்பட்டிருந்தது. இதுவே இணையத்தில் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
இதைப் பற்றி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கேட்கப்பட்டபோது, ரிஷப் ஷெட்டி விளக்கமளித்தார்:
“உணவு என்பது ஒவ்வொருவரின் விருப்பம். யாரும் அதற்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது. அந்த போஸ்டர் யாரோ போலியாக உருவாக்கியது. அது எங்கள் கவனத்துக்கு வந்தபோது எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இப்படம் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள சிலர் செய்த காரியம் தான் அது. அந்த போஸ்டருக்கும் படக்குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
இதன் மூலம், வைரலான அந்த போஸ்டர் அதிகாரப்பூர்வமல்ல என்பதும் உறுதியாகியுள்ளது.