“விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்” – சாந்தனு ஓபன் டாக்!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் போன்ற நடிகர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறேன் என்று நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
சாந்தனு, ஷேன் நிகாமுடன் இணைந்து நடித்துள்ள பல்டி என்ற மலையாளப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. விளையாட்டு பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குநராக அறிமுகமாகும் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் தயாரித்துள்ளனர்.
இப்படம் தொடர்பான பேட்டியில் சாந்தனு தனது தோல்விகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது:
“நான் அறிமுகமானபோது சாந்தனு பாக்யராஜ் என்பதில்தான் அனைவரும் கவனம் செலுத்தினார்கள். பாக்யராஜ் மகன் என்பதால்தான் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் முதல் படம் வெற்றியடையாததால், எனக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பின்வாங்கினர். அடுத்த படமும் எதிர்பார்த்தளவு செல்வாக்கு பெறவில்லை.
2–3 ஆண்டுகள் கழித்து தான் என்ன தவறு நடக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்குள் நான் சரிவை சந்தித்துவிட்டேன். அந்த நேரத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை கவனித்தேன். 2014–2015க்குப் பிறகு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சமீபத்தில் மணிகண்டன் ஆகியோரைப் பார்த்தேன்.
அவர்கள் அடிமட்டத்திலிருந்து கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். அந்தக் கற்றல்தான் எனக்கு தவறியிருந்தது. இதை உணர்ந்தபின் அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். சாக்லேட் பாய் அல்லது எலைட் ஹீரோவாக இல்லாமல், மக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்க வேண்டும் என நினைத்தேன்” என்று சாந்தனு கூறினார்.