ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் செப்.30-ல் தீர்ப்பு
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து, இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் 2013-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு 4 வயது ஒரு மகளே உள்ளனர்.
12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இருவரும், திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக 2024-ம் ஆண்டு அறிவித்தனர். இதையடுத்து, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த மார்ச் 24-ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் இந்த வழக்கில் முடிவு எடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது. அந்த காலம் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி செல்வ சுந்தரி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர்.
இருபுற வழக்கறிஞர்கள் ஜெம்லெஸ் காந்தி மற்றும் ஜெ.ஜெயன் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்து, அடுத்த விசாரணையில் அவர்களை ஆஜராக அனுமதிக்குமாறு கோரினர். பின்னர், சைந்தவி மற்றும் ஜி.வி.பிரகாஷ் தாங்கள் இணைந்து வாழ விரும்பவில்லை என்றும், பிரிந்து வாழவே விரும்புவதாக தனித்தனியாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.
நீதிபதி, குழந்தையை யார் கவனிப்பார் என்று கேட்கும் போது, ஜி.வி.பிரகாஷ், மகளை சைந்தவி கவனிக்கலாம்; அவருக்கு எந்த எதிர்ப்பு இல்லை என்றும் கூறினார். இதை பதிவு செய்து, நீதிபதி செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்து வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.