“கலைமாமணி விருது என் மட்டும் அல்ல, எல்லோருடையதும்” – அனிருத் உணர்ச்சி பகிர்வு
கலைமாமணி விருது என் மட்டும் அல்ல, நம்முடையது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 2023 ஆம் ஆண்டுக்கான இசையமைப்பாளர் பிரிவில் கலைமாமணி விருதை அனிருத் பெறுகிறார். இந்த விருதைப் பெற்றதையொட்டி அனிருத் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியதாவது: “மிகப் பெருமைக்குரிய கலைமாமணி விருது எனக்குக் கிடைத்ததைக் கொண்டு, நான் அளவில்லா மகிழ்ச்சியுடனும் தாழ்மையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயல் இசை நாடக மன்றத்திற்கு என் இதயப்பூர்வ நன்றிகள்.
என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசைக் குழுவினர்கள் – குறிப்பாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்த என் ரசிகர்களுக்கும் இசைப் பிரியர்களுக்கும் நன்றி. இந்த விருது என்னுடையது மட்டும் அல்ல, நம்முடையது” என தெரிவித்துள்ளார் அனிருத்.