நானியுடன் அடுத்தப்படம் இயக்கும் ‘ஓஜி’ இயக்குநர் சுஜித்
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ திரைப்படத்தை இயக்கிய சுஜித், தற்போது நடிகர் நானியை இயக்கவுள்ளார். இந்த படத்தையும் டிவிவி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியாகிய ‘ஓஜி’, வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. முதல் நாள் மற்றும் ப்ரீமியர் காட்சிகளின் வசூல் இணைந்து ரூ.100 கோடியைத் தாண்டும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையடுத்து, நானியை நாயகனாக கொண்டு ‘ப்ளடி ரோமியோ’ என்ற பெயரில் புதிய படத்தை சுஜித் இயக்கவுள்ளார். இந்த படம் டார்க் காமெடி – ஆக்ஷன் கலந்த கதை கொண்டதாக இருக்கும். “படமாக்குவதற்கு கடினமானதாக இருக்கும் இப்படத்தை சவாலாக எடுத்துள்ளேன். எடிட்டிங், இசை உள்ளிட்ட பல அம்சங்களில் வித்தியாசத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளேன்” என்று சுஜித் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சுஜித் இயக்கிய ‘ஓஜி’ தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால், சிறுவர்களை திரையரங்குகளில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், திரையரங்குகளுக்கு சென்ற குடும்பத்தினர், மேலாண்மையுடன் வாக்குவாதம் செய்த வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.