‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு – ரிஷப் ஷெட்டி விளக்கம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தபோது, ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியுள்ளார். அப்போதுதான் அவர் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியும் என்று கூறினார். இதற்குத் தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் புகார்படி, ரிஷப் ஷெட்டி தெலுங்கு மொழியை அறிந்து பேசாமல் சென்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது.
ஏற்கெனவே பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளியீட்டின் போது சில கன்னட அமைப்புகள் பெங்களூரில் எதிர்ப்பு தெரிவித்ததை ஒப்பிட்டு, ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.
இதுகுறித்து மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
“புதிய மொழிகளைக் கற்றுக் கொள்வதை உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனென்றால் நாம் ஒரு இடத்துக்குச் செல்லும்போது அவர்கள் மொழியில் பேசினால் அது மரியாதையைக் காட்டுகிறது. அதனால்தான் மொழி கற்பதை எப்போதும் முயற்சிக்கிறேன். ஒரு கன்னடராக நான் பெருமை கொள்கிறேன். என் சொந்த மொழிக்கு நான் கொடுக்கும் அன்பும் மரியாதையும் மற்ற மொழிகளுக்கும் வழங்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. இந்தியாவில் பல்வேறு மொழிகள், கலாச்சாரம், நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் அனைத்தின் மையமும் ஒன்றே. அதனால்தான் மற்றொரு மொழியைக் கற்றுக் கொள்வது மகிழ்ச்சி தருகிறது” என்று தெரிவித்தார்.