“தயவுசெய்து சினிமாவை விமர்சிக்காதீர்கள்” – பவன் கல்யாண் வேண்டுகோள்
“தயவுசெய்து சினிமாவை விமர்சிக்காதீர்கள். ஒருவரையொருவர் பாராட்டுங்கள்” என்று நடிகர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
‘ஓஜி’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் படக்குழுவினர் முழுமையாக கலந்துகொண்டனர். விழாவில் பவன் கல்யாண், ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகமும், இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும், ஜப்பானில் சில காட்சிகளைப் பதிவு செய்ய இயக்குநர் விரும்பினார்; ஆனால் தன்னால் முடியாமல் போனதை நினைத்து வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் மேலும் கூறியதாவது: “ரசிகர்களுக்கு படத்தின் பின்னணி தெரியாது. பலரும் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வேலை செய்கிறார்கள். இயக்குநர் சுஜித் தனது மனைவியையும் குழந்தையையும் ஒன்றரை மாதமாகப் பார்க்கவில்லை. ஆனால், ரசிகர்கள் இணையத்தில் சண்டை போடுகிறார்கள். இதுபோன்ற செயல்களை நிறுத்துமாறும் எனது ரசிகர்களையும் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திரைப்படங்கள் கடந்த காலத்தில் 100 நாட்கள் ஓடி கொண்டாடப்பட்டன. ஆனால் இன்று ஒரு படத்தின் ஆயுட்காலம் 6 நாட்கள் மட்டுமே. ஆகையால் தயவுசெய்து சினிமாவை விமர்சிக்காதீர்கள்; ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்” என்று அவர் பேசியது.
சுஜித் இயக்கத்தில், பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன் தாஸ் நடித்த ‘ஓஜி’ படத்தை ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், தமன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். டிவிவி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் ரூ.300 கோடியுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது.