சச்சினின் பாராட்டு: இசையமைப்பாளர் தமன் நெகிழ்ச்சி
இசையமைப்பாளர் தமன், தனது பேட்டிங் திறமையை இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியதற்காக நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
‘ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்ற தமன், அந்த நிகழ்வின் பின்னர் டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு பயணித்தார். அதே விமானத்தில் சச்சின் டெண்டுல்கர் பயணித்திருந்தார்.
தமன் கூறியதாவது:
“கிரிக்கெட்டின் கடவுள், தி லெஜண்ட் சச்சினுடன் பயணம் செய்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரையிலும் அருமையான நேரமாக இருந்தது. என் சிசிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்த வீடியோக்களை அவருக்கு காட்டினேன். அப்போது மாஸ்டர் சச்சின் ‘உங்களிடம் சிறந்த பேட்டிங் வேகம் இருக்கிறது’ என்று பாராட்டினார். அந்த வார்த்தைகள் மறக்க முடியாது. விரைவில் அவருடன் பணியாற்ற வேண்டும்.”
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் தமன். இவர் தெலுங்கு படங்கள் ‘அகண்டா 2’, ‘த்ரிவிக்ரம் – வெங்கடேஷ் படம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.