“தேனிலவையும் அவர்கள் தான் திட்டமிடுவார்கள்!” – திருமண பேச்சுக்களுக்கு த்ரிஷா நகைச்சுவையான பதில்
திருமண வதந்திகளுக்கு நடிகை த்ரிஷா சிரிப்பூட்டும் வகையில் பதிலடி அளித்துள்ளார்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில், நடிகை த்ரிஷா சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், இரு குடும்பங்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இந்த செய்திகளுக்கு பதிலளிக்கத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா நகைச்சுவையாகக் கூறியுள்ளார். “என் வாழ்க்கையை எனக்காக பிறர் திட்டமிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. தேனிலவுக்கும் அவர்கள் ஏற்பாடு செய்யும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.