“போலியான ஏஐ படங்களை பகிராதீர்” – பிரியங்கா மோகன் வேண்டுகோள்
“என்னை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ உருவாக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதையும் பரப்புவதையும் தயவு செய்து நிறுத்துங்கள்” என நடிகை பிரியங்கா மோகன் கேட்டுக்கொண்டார்.
கன்னடத் திரைப்படமான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா மோகன், தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அண்மையில் பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், ‘ஓஜி’ படத்தின் ஒரு பாடல் காட்சியைச் சேர்ந்ததாக கூறி சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவை உண்மையல்ல, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என பிரியங்கா மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்:
“என்னை தவறாக சித்தரிக்கும் ஏஐ படங்கள் இணையத்தில் சுற்றி வருகின்றன. இத்தகைய போலி படங்களைப் பகிர்வதும் பரப்புவதும் தவறானது. ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக ஏஐ பயன்படுத்தப்பட வேண்டும்; ஆனால், தவறான செய்திகளை உருவாக்குவதற்கு அல்ல. நாம் உருவாக்குவது, பகிர்வது குறித்து பொறுப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.