WhatsApp Channel
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ள வளாகத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் பற்றி கோவிலை கட்டும் அறக்கட்டளை, மக்களிடம் ஆலோசனை கேட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளை ஒன்றை, மத்திய அரசு அமைத்தது.
இந்த அறக்கட்டளை, கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட், 5ம் தேதி, ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இப்போது, அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தியில், ராமர் கோவில் சுற்றி உள்ள, 70 ஏக்கர் நிலத்தையும் பக்தர்கள் வசதிக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகத்தில், நுாலகம், குருகுல பள்ளி, அருங்காட்சியகம், கோசாலை, யாத்ரீகர்கள் தங்குமிடம் உட்பட பல வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வசதிகளை எப்படி கட்டலாம், மேலும், வேறு என்ன வசதிகள் செய்யலாம் என்பது பற்றி, மக்களிடம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. ஆலோசனைகள் அனைத்தும், வாஸ்து மற்றும் சிற்ப சாஸ்திரத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆலோசனைகளை, நவ., 25க்குள், அறக்கட்டளைக்கு, ‘இ – மெயில்’ வழியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Discussion about this post