கொரோனாவிடம் இருந்து கிராமங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
10 மாநிலங்களில் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனாவானது, உங்களது பணியை மிகவும் கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் மாற்றியுள்ளது. புதிய சவால்களுக்கு மத்தியில், அதற்கான திட்டங்களும் தீர்வுகளும் நமக்கு தேவைப்படுகிறது. உள்ளூர் அனுபவங்களை பயன்படுத்துவது முக்கியம். அதேநேரத்தில் ஒரே நாடு என்ற எண்ணத்துடன் நாம் பணியாற்ற வேண்டும். இந்த துறையில் நீங்கள் செய்த பணிகள், உங்களின் அனுபவம் மற்றும் கருத்துகள் மூலம், புதிய நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்க உதவுகிறது. தடுப்பூசி திட்டத்தை தயாரிக்கும் போது, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகள் எடுத்து கொள்ளப்பட்டன.
கிராமங்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். பாதிப்பு குறைகிறது என்பதால், தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு விடக்கூடாது. 15 நாட்களுக்கான தடுப்பூசி திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தடுப்பூசி தொடர்பான கால அட்டவணையை பராமிக்க, தடுப்பூசி விநியோகம் உங்களுக்கு உதவும்.
தடுப்பூசி வீணாவது பிரச்னையாக உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி வீணாவது என்பது, ஒருவருக்கு கிடைக்கும் பாதுகாப்பை அழிக்கிறது என அர்த்தம். இதனால், தடுப்பூசி வீணாவதை நிறுத்துவது முக்கியம். உங்கள் மாவட்டத்தில் இளைஞர்கள், குழந்தைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை கலெக்டர்கள் சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Discussion about this post