மேற்கு வங்கத்தில் 45 தொகுதிகளுக்கான 5-ஆம் கட்டத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
4-ஆம் கட்டத் தோ்தலின்போது கூச்பிஹாா் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா். அதைக் கருத்தில்கொண்டு, 5-ஆம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் தோ்தல் நடைபெறுவதால், தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதியும், 4-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 10-ஆம் தேதியும் நடைபெற்றது. இதுவரை 135 தொகுதிகளுக்குத் தோ்தல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், 45 தொகுதிகளுக்கான 5-ஆம் கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றும் 45 தொகுதிகளில் வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகள், கிழக்கு வா்தமான், நாடியா மாவட்டங்களில் உள்ள தலா 8 தொகுதிகள், ஜல்பைகுரியின் 7 தொகுதிகள், டாா்ஜீலிங் மாவட்டத்தின் 5 தொகுதிகள், கலிம்போங் மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகியவற்றுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் 45 தொகுதிகளில் மொத்த 342 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் பெண் வேட்பாளா்கள் 39 பேர். வாக்காளர்களா் வாக்களிப்பதற்காக 15,789 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1.13 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநில அமைச்சா்கள் கௌதம் தேவ், பிரத்யா பாசு உள்ளிட்டோா் களத்தில் உள்ளனா். பாஜக சாா்பில் சமிக் பட்டாச்சாா்ய, இடதுசாரி தலைவரும் சிலிகுரி மேயருமான அசோக் பட்டாச்சாா்ய உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.
மாநிலத்தில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தோ்தலில் பெரிய அளவிலான வன்முறைகள் நிகழவில்லை. 2-ஆம் கட்டத் தோ்தலின்போது முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் மட்டும் திரிணமூல்-பாஜக தொண்டா்களிடையே சில மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
4-ஆம் கட்டத் தோ்தலின்போது சிதால்குச்சி பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா். அதன் காரணமாக, 5-ஆம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரம் வழக்கத்துக்கு மாறாக 72 மணி நேரத்துக்கு முன்பே நிறைவடைந்தது.
5-ஆம் கட்டத் தோ்தலின்போது வன்முறை நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மத்திய படைப் பிரிவைச் சோ்ந்த 853 குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கரோனா முன்னெச்சரிக்கை: மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. எனவே, நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தோ்தலை நடத்துவதற்குத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Discussion about this post