திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்,தைப்பூசம், கந்த சஷ்டி திருவிழாக்களைப் போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று அனைவரின் நினைவுக்கும் வரும். எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அருள் கிடைக்கவும் திருமண தடைகள் நீங்கி கல்யாண வரம் கிடைக்கவும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படவும் பங்குனி உத்திர விரதம் இருக்கலாம்.
தமிழ் மாதங்களில் சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி சந்திரன் சஞ்சரிக்கும் நாள் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் சித்திரா பவுர்ணமி தொடங்கி வைகாசி விசாகம், ஆனி கேட்டை, ஆடி பூராடம், ஆவணி திருவோணம், புரட்டாசி உத்திரட்டாதி, ஐப்பசி அசுவினி, கார்த்திகை திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் வரை 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும்.
27 நட்சத்திரங்களில் 12வதாக வரும் உத்திர நட்சத்திர நாயகன் சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டை நன்மைகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். இந்த நாளில்தான் தெய்வீக திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார்.
பக்தியுள்ள கணவர் கிடைக்க பங்குனி உத்திர விரதம் இருக்க வேண்டும். தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள். அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர்.
சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.
இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர் பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். பழனியில் நாளைய தினம் திருக்கல்யாணமும் வெள்ளித்தோரோட்டமும் நடைபெறும் ஞாயிறன்று பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெறும்.
முருகன் அருள் கிடைக்கவும் திருமண தடைகள் நீங்கி கல்யாண வரம் கிடைக்கவும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படவும் பங்குனி உத்திர விரதம் இருக்கலாம்.
Discussion about this post