திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலிந்தான் இருந்தார். ஆனால், அவர் ஒன்றுமே செய்யவில்லை. பதவி கிடைத்ததும் அதைச் சுகமாக அனுபவித்தார். நாட்டு மக்களைப்பற்றி கவலைப்படவில்லை.
எங்கள் ஆட்சியில் உள்ளாட்சித்துறை 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளது. சிறப்பாக, திறமையாக செயல்பட்டால்தான் இதுபோன்ற விருதுகளைப் பெற முடியும். உங்களுக்கு அந்த தகுதி இல்லை, திறமை இல்லாத தலைவர்தான் ஸ்டாலின். அதனால்தான் அவதூறு செய்தியை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பச்சை பொய் பேசி வருகிறார்.
இன்றைக்கு நாங்கள் நெடுஞ்சாலைத்துறையில் சிறப்பான சாலைகளை போட்டுள்ளோம். எங்கு சென்றாலும் சிறப்பான சாலைகள் இருக்கிறது. ஆனால் அவர்களது வாயில் வருவது எல்லாம் பொய், ஊழல். கருணாநிதி என்றைக்கு முதல்வர் ஆனாரோ அன்றைக்கே ஊழல் பெருகிவிட்டது.
அதை அவர்களால் மறக்க முடியவில்லை, பழக்கதோஷம் அவர்களை விடவில்லை. அதனால்தான் திருப்பி திருப்பி அதையே பேசிக்கொண்டு வருகிறார்கள். நல்லது செய்தால்தானே மக்கள் ஏற்பார்கள். நல்லது செய்யும் எண்ணம் அவர்களுக்கு கிடையாது.
இன்னும் ஆட்சி அதிகாரத்துக்கே வரவில்லை. ஆனால் காவல் துறையை மிரட்டுகின்றனர். எந்த அரசு வந்தாலும் அதிகாரிகளிடம் சுமூகமாக பேசினால்தான் பணிகள் சிறப்பாக நடைபெறும். அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
அதிகாரம் வரும் முன்பே அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அவர்களிடம் அதிகாரம் வந்தால் என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள். உதயநிதி ஸ்டாலின் அந்தக் கட்சிக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகிறது. அவர் தேர்தல் அறிக்கை வெளியிடுவது மட்டுமல்ல, டிஜிபியையே எச்சரிக்கிறார்.
இதுபோல் அதிமுகவில் நடக்குமா? திமுக என்பது ரவுடி கட்சி, அராஜக கட்சி. அக்கட்சியின் தலைவரே அப்படித்தான் நடந்துகொள்கிறார். தலைவர் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியில்தான் இருப்பார்கள்.
திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் குண்டு குண்டாக இருக்கிறார்கள். ஹோட்டல்களுக்கு சென்று பிரியாணி, புரோட்டா சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கும் பழக்கமே அவர்களிடம் கிடையாது. ஓட்டல் உரிமையாளர்கள் பணம் கேட்டால் அவர்களை மிரட்டுவார்கள். இதற்கு அந்தக் கட்சியின் தலைவர் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்.
தப்பு செய்தவர்களை கண்டித்தால்தான் உண்மையான தலைவர். கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டுக்கு தேவையா? 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கோரப்பசியில் இருக்கிறார்கள். அவர்கள் வந்தால் சும்மா இருப்பார்களா?
தப்பி தவறி அவர்களுக்கு ஓட்டுப்போட்டால் கடை, கடையாக வந்து வசூல் செய்வார்கள். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதல் மாநிலம் தமிழகம்தான். எங்கேயும் சாதி சண்டை கிடையாது, மதச் சண்டை கிடையாது.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தமிழகம் மேலும் வளர்ச்சியடைய அதிமுகவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்துவிடாதீர்கள். நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வராது. இருந்தாலும் உஷாராக இருக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
Discussion about this post