இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
சென்னையில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் அரை சதமெடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். புஜாராவை 21 ரன்களில் வீழ்த்தினார் ஜாக் லீச். இந்திய கேப்டன் விராட் கோலியை அற்புதமான பந்தால் போல்ட் ஆக்கினார் மொயீன் அலி. சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாக உள்ளதால் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்களுக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ரோஹித் சர்மா விரைவாக ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தி வருகிறார்.
இந்திய அணி, முதல் நாள் உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 78 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 80, ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ரோஹித், ரஹானே ஆகிய இருவரும் விரைவாக ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். ரஹானேவின் சிறப்பான ஆட்டம் ரோஹித் சர்மா மீதான அழுத்தத்தைக் குறைத்தது. அவர் வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை அவ்வப்போது வெளிப்படுத்தினார். ரோஹித் – ரஹானே கூட்டணி 99 பந்துகளில் 50 ரன்களை எடுத்தது. சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் ரோஹித் சர்மா. (அடுத்த இடத்தில் தோனி – 179 சிக்ஸர்கள்)
இன்று நன்கு விளையாடி வரும் ரோஹித் சர்மா, 130 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். இது அவருடைய 7-வது டெஸ்ட் சதமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 13 இன்னிங்ஸில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 132, ரஹானே 36 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ரோஹித் – ரஹானே கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 180 பந்துகளில் 100 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை அடைவதற்கு இந்தக் கூட்டணி முக்கியப் பங்கு வகிக்கிறது.
Discussion about this post