8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி மாற்றம் – மத்திய அரசுக்கு நன்றி: ப.சிதம்பரம் கருத்து
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்ததற்கு மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது தவறை உணர்ந்து திருத்திய மத்திய அரசுக்கு நன்றி சொல்கிறேன். ஜிஎஸ்டி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தபோது, இப்படிப் பல்வேறு அடுக்குகளில் வரி விதிப்பது தவறு என்று எங்களால் எச்சரிக்கை சொல்லப்பட்டது.
அந்த நேரத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியமும் இதையே வலியுறுத்தினார். ஆனால் அப்போது பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்டவர்கள் எங்களது கருத்தைக் கேட்கவில்லை. நாடாளுமன்றத்திலும் இதை பலமுறை எடுத்துரைத்தோம்; நான் பல கட்டுரைகளிலும் எழுதியுள்ளேன். பல பொருளாதார நிபுணர்களும் இதைத் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்போதாவது தவறை உணர்ந்து சரிசெய்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த எட்டு ஆண்டுகளாக நடுத்தர மக்களையும் ஏழை மக்களையும் சுமைபோட்டு 18% வரி வசூலித்துவிட்டு, இப்போது தான் 5% எனக் குறைத்துள்ளோம் என்று சொல்கிறார்கள். இந்த விகிதம் இன்று பொருந்துகிறதென்றால் ஏன் முன்பு பொருந்தவில்லை? மக்களிடம் இருந்து வசூலித்த பணம் எங்கே சென்றது? இப்போது மனம் திருந்தி, அறிவு தெளிந்து தவறைத் திருத்தியுள்ளதால் பாராட்டுகிறேன்,” என்றார் ப.சிதம்பரம்.
ஜிஎஸ்டி கவுன்சில் 56-வது கூட்டம் புதன்கிழமை டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது உள்ள 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்குகளுக்குப் பதிலாக, இனி 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மட்டுமே வரி விதிக்கப்படும். 12% மற்றும் 28% விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஆனால் சிகரெட், புகையிலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி மாற்றம், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பெரிய நிதிச்சுமையை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.