தீராத நோய்கள் தீரும் பாஸ்கரேஸ்வரர் தரிசனம் | ஞாயிறு சிறப்பு

இறைவன்: பரிதியப்பர் (பாஸ்கரேஸ்வரர்)

இறைவி: மங்களாம்பிகை

ஸ்தல வரலாறு:

‘பரிதி’ என அழைக்கப்படும் சூரியனே, கடுமையான ஒரு நோயால் பாதிக்கப்பட்ட போது, அந்தத் துயரை போக்க சிவபெருமானை நோக்கி உருக்கமாக பிரார்த்தித்து கடுமையான தவமிருந்தார். அப்போது சிவன் அவனுக்குத் தானே ஒரு தீர்த்தம் உருவாக்கி, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நோய் தீரும் என அருளினார். சூரியனும் அவ்வாறே செய்து வழிபட்டபின், அவனின் நோய்கள் நீங்கின. இதனாலே, இங்குள்ள இறைவன் ‘பரிதியப்பர்’, ‘பாஸ்கரேஸ்வரர்’, ‘பரிதீசர்’ என அழைக்கப்படுகிறார்.

இன்னொரு புராணம்:

சூரிய வம்சத்தைச் சேர்ந்த சிபி மன்னர் (இராமபிரானின் முன்னோர்) முதுமை அடைந்த பிறகு ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து சிவனாராதனைக்காக யாத்திரை மேற்கொண்டார். அந்தக் காலத்தில் இந்தத் தலத்திற்கு வந்தவர், இங்கு சிறிது ஓய்வெடுத்தார். அவரது குதிரையை பராமரித்த சேவகன் புல் தேடும்போது, பூமியை தோண்டியபோது, அவனது கருவி நிலத்துக்குள் இருந்த லிங்கத்தைத் தொட்டது. உடனே லிங்கத்திலிருந்து இரத்தம் வடிந்தது. இதை அறிந்த சிபி மன்னர் அந்த இடத்தை விரிவாக தோண்ட உத்தரவிட்டார். அப்போது சூரியன் பிரதிஷ்டை செய்த லிங்கம் வெளிப்பட்டது. அதை அபிஷேகம் செய்து, வழிபாட்டிற்கு உரிய முறையில் அர்ச்சனை செய்தார். இன்றும் அந்த சிவலிங்கத்தில் அந்த வடு காணக்கிடைக்கிறது. பின்னர் அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது. சூரியன் பிரதிஷ்டை செய்த லிங்கம், சூரிய வம்ச மன்னன் வழியே மக்கள் முன் வெளிப்பட்டது என்பது இங்கு முக்கிய வரலாறு.

ஸ்தல சிறப்புகள்:

நீண்ட நாட்களாக தீராத நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்துச் சிவனை வழிபட்டால் தீர்வை அடையலாம். சிவபெருமான் எதிரே நின்று சூரியனே அவரை தரிசிக்கும் திருக்காட்சியை இங்கு தவிர வேறு எங்கும் காண முடியாது. சூரியனுக்கான தோஷம் நிவர்த்தியான இடமாதலால், இது பிதுர்தோஷ நிவாரணத் தலமாக பிரசித்தி பெற்றது. ஜாதக ரீதியாக எவ்வகையான கிரகங்களால் ஏற்படும் பிதுர்தோஷங்களுக்கும் இத்தலத்தில் பரிகாரம் செய்யப்படலாம்.

இடம்:

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில், உளூர் என்னும் இடத்தில் இறங்கி (சுமார் 15 கிமீ), அங்கிருந்து கிழக்கு நோக்கி 2 கிமீ சென்றால் இந்தப் பரிதியப்பர் கோயிலை அடையலாம்.

தரிசன நேரம்:

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை.

Facebook Comments Box