மேட்டு மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு நடை பெறுவது மரபாக இருந்து வருகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் ஊர்வலமாகக் கொண்டு வந்து, அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அன்று இரவு அம்மன், காவிரியில் தீர்த்தவாரி சடங்கிற்காக எழுந்தருளினார். நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கையாக அர்ப்பணித்து, வரிசையாக அமர்ந்தனர்.

பின்னர், கோயில் பரம்பரை பூசாரி பெரியசாமி, பாதக்குரடு (ஆணி செருப்பு) அணிந்து, இரும்புப் பட்டை கம்பியால் தானே தன்னை அடித்துக்கொண்டு அருள் பெற்ற பின், பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்வின்போது, சில பக்தர்களின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் மஞ்சள் வைத்துச் சிகிச்சை அளித்தனர். மேலும், ஆழமான காயமடைந்தவர்களுக்கு, விழா இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் தையல் போடப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

இவ்விழாவில், இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், கரூர் உதவி ஆணையர் ரமணிகாந்தன், செயல் அலுவலர் நரசிம்மன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று பார்வையிட்டனர்.

Facebook Comments Box