சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் அருளும்

சேலம் நகரின் மையப்பகுதியில், திருமணிமுத்தாறு நதியின் கரையில் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சேலத்தில் கோட்டை அமைத்து அரசாணை புரிந்த சேரர் வம்ச அரசர்கள், அந்த கோட்டுக்குள் பெரிய மாரியம்மனை பிரதிஷ்டை செய்து பக்தியுடன் வழிபட்டனர்.

அதிலிருந்து, சேலம் மக்களின் காவல் தெய்வமாக இந்த அம்மன், பக்தர்களின் வாழ்வில் பாதுகாவலாக இருந்து வருகிறார்.

இந்த அம்மன், தனது தலையில் அக்னி சுடரால் ஜொலிக்கும் கிரீடத்துடன், நான்கு கரங்களில் நாகம், பாசாங்குசம், திரிசூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி, தெய்வீக அழகுடன் வீற்றிருக்கிறார்.

தன் வலது காலைத் தொங்கவிட்டு, அதன் மேல் இடது காலைக் கோணிக் கொண்டு யோக அசனத்தில் அமர்ந்தவாறு, சிவசக்தியாக புன்னகை பொலிவுடன் வரும் பக்தர்களுக்கு அருள் தந்து வருகின்றார். சேர அரசர்கள் போர்க்கு புறப்படுமுன் அம்மனை வணங்கி செல்லும் பழக்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த மரபினைப் பின்பற்றிச் சேலத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் ஆசைகள் நிறைவேற இவ்விடம் வந்து வேண்டியிருக்கின்றனர். தங்களை காப்பாற்றும் தெய்வமாக கோட்டை பெரிய மாரியம்மனை நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆண்டு தோறும் நடைபெறும் ஆடி திருவிழா, சேலத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும். அம்மனுக்கு பூச்சாட்டும் வழிபாடு தொடங்கிய பிறகே, மற்ற அம்மன் கோவில்களில் விழாக்கள் தொடங்கும். 22 நாட்கள் நடைபெறும் இந்த ஆடித் திருவிழா காலத்தில், சேலம் முழுவதும் திருவிழா வண்ணத்தில் களைகட்டும்.

Facebook Comments Box