கட்டணமின்றி அறுபடை வீடுகளுக்கான பயணம் – விண்ணப்பிக்க செப்.15 கடைசி நாள்
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2025–26ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பை அமல்படுத்தும் வகையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு மூத்த குடிமக்கள் ஒருமுறை கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படும்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள்:
- ஹிந்து மதத்தினைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- வயது 60க்கு மேல் மற்றும் 70க்குள் இருக்க வேண்டும்.
- வருடாந்த வருமானம் ரூ.2 லட்சத்தை மிஞ்சக் கூடாது.
- வருமானச் சான்றிதழ் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.
- உடல்நலத்திற்கேற்ப பயணம் மேற்கொள்ள இயலும் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்.
- ஆதார் அட்டை நகலும் சேர்க்கப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை, தொடர்புடைய மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ அல்லது இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.hrce.tn.gov.in) மூலமாக பதிவிறக்கம் செய்தோ பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தேவையான சான்றுகளுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.