ஆடி மாத சப்தாகம் பூஜைக்காக சோட்டானிக்கரை கோயிலுக்கு காணிக்கையாக நிலக்கோட்டை மலர்கள்!
ஆடி மாத சப்தாகம் பூஜையை முன்னிட்டு, கேரளாவின் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலுக்கு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவர் தினசரி மலர்கள் அனுப்பி வருகிறார்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தையொட்டி ஆகஸ்ட் 4 முதல் 11 வரை சப்தாகம் எனும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில், அம்மன் சரஸ்வதி, துர்க்கை, காளி ஆகிய மூன்று ரூபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஏழு நாள் காலத்திற்கு தேவையான அலங்கார மலர்களை, நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பக்தர் சுகந்தா கரிகால பாண்டியன் தினமும் 500 கிலோ அளவில் மாலையாகத் தொடுத்து அங்குள்ள கோயிலுக்கு காணிக்கையாக அனுப்புகிறார்.
துரிதமாக வாடாமல் நீடிக்கும் மலர்களான பட்டு ரோஜா, செவ்வந்தி, செண்டுமல்லி போன்றவை மலர் சந்தையில் வாங்கப்படுகின்றன. 20க்கும் மேற்பட்ட மாலைக்கட்டும் தொழிலாளர்கள் மாலைகளை கதம்ப மலர்களாக வடிவமைத்து, லாரி மூலமாக சோட்டானிக்கரை கோயிலுக்கு அனுப்பப்படுகிறது.
சுகந்தா கரிகால பாண்டியன் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நலனுக்காகவும், அவர் நாட்டுக்கு சிறந்த சேவைகள் செய்ய ஆற்றலுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்த மலர் காணிக்கை பகவதிக்கு சமர்ப்பிக்கப்படுகிறதெனத் தெரிவித்தார்.