பதவி உயர்வும் ஆயுள் விருத்தியும் தரும் – சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் | ஞாயிறு தரிசனம்

திரிவிக்கிரம நாராயணர் – லோகநாயகி அம்மன்

தல வரலாறு:

பல யுகங்கள் வாழும் சாகா வரத்தைப் பெற்றிருந்த பிரம்மா, அந்த வரத்தின் காரணமாக கர்வம் அடைந்து, படைக்கும் பணியை சரிவர செய்யாமல் இருந்தார். அவரது அகந்தையை அடக்க, மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக மூவுலகையும் அளந்தார்.

அந்த திரிவிக்கிரம வடிவை காண விரும்பிய உரோமச முனிவர், இத்தலத்தில் தவம் செய்தார். அவரின் பக்தியை மகாவிஷ்ணு ஏற்று, திரிவிக்கிரம அவதார தரிசனம் வழங்கினார். பின்னர், “என் ஏகாந்த நிலையை கண்ட நீ, அரிய பலன்களைப் பெறுவாய். மேலும், பிரம்மாவை விட கூடுதலான ஆயுட்காலமும் பெறுவாய். உன் உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால், பிரம்மாவின் ஆயுளில் ஒரு வருடம் குறையும்” என அருள் மொழி கூறினார். இதனால், தன் ஆயுள் குறைவதை உணர்ந்த பிரம்மாவின் கர்வம் நீங்கியது.

கோயில் சிறப்பு:

பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியை தாங்குவது போல, இங்கு லோகநாயகி தாயார் தன் மார்பில் திரிவிக்கிரமரைக் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். ஒருகால் ஊன்றி, மற்றுகாலை தூக்கிய நிலையில் இருப்பதால், சுவாமியின் பாதம் வலிக்காமல் இருக்க அவள் இவ்வாறு தாங்குவதாக நம்பப்படுகிறது. இதனால் தாயாரின் மார்பில் சுவாமி பதக்கம் காணப்படுகிறது. இந்த தரிசனம் மிக விசேஷமானது.

கிழக்கு நோக்கி மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயில், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்றது. பணியில் சிறப்பு பெற, பதவி உயர்வு அடைய, ஆயுள் விருத்தி பெற இங்கு வழிபடுதல் சிறந்தது.

அமைவிடம்: சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் 2 கிமீ தூரத்தில்.

திறப்பு நேரம்: காலை 7.30 – 11.30, மாலை 5.00 – 8.30.

Facebook Comments Box