கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் | ஆடி மாதமும் அருள்மிகு அம்மன் திருவருளும்
சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை உண்டாக்கிய அசுரர்களை அழிக்க, ஆதிபராசக்தி இளம்பெண்ணாக அவதரித்து, துர்க்கையின் அம்சத்துடன் அசுரர்களை ஒழித்தார். அவர் இங்குள்ள வனதுர்க்கையாக காட்சியளிக்கிறார்.
இந்த அம்மன், ஒவ்வொரு இரவும் காசிக்கு சென்று வருவதாக நம்பப்படுகிறது. அகஸ்தியர், மார்க்கண்டேயர் ஆகியோரும் இங்கு வந்து தரிசனம் செய்வதாகக் கூறப்படுகிறது. மற்ற துர்க்கை அம்மன் சன்னதிகளில், அம்மன் வடக்கு நோக்கி சிம்மம் அல்லது மகிஷாவாகனத்தில் இருக்கிறார்; ஆனால் இங்கு, வனதுர்க்கை கிழக்கு நோக்கி பத்ம பீடத்தில் வீற்றிருக்கிறார்.
மேலும், வலது கையை சாய்த்து அபயஹஸ்தம் மற்றும் வரதம் என இரு முத்திரைகளில் அருள் பாலிப்பது, இத்தலம் மட்டுமே கொண்டுள்ள தனிச்சிறப்பு. தினமும் ராகு காலத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. குலதெய்வம் தெரியாத பல பக்தர்கள், அம்மனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுகின்றனர்.
குடும்ப வளர்ச்சிக்காக சந்தன அபிஷேகம், எதிரி தொல்லை நீங்க குங்கும காப்பு, செவ்வரளி அர்ச்சனை செய்து வழிபடுவர். திருமணத் தடைகள், கடன் பிரச்சினைகள், குடும்ப சிக்கல்கள் நீங்கி, காரிய சித்தி அடைய, பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.