திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா: காவடிகள் சுமந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. “அரோகரா” என்ற கோஷம் விண்ணை முட்ட, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருவள்ளூர் மாவட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு திருவிழா, கடந்த 14-ஆம் தேதி ஆடி அஸ்வினி நாளில் தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்ச்சியான ஆடிக் கிருத்திகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தங்கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்கம், மரகதக்கல், வைர ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதேசமயம் காவடி மண்டபத்தில் உற்சவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து தீபாராதனை பெற்றார்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல ஆயிரம் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்டவற்றை சுமந்து வந்ததோடு, சரவணப் பொய்கை மற்றும் நல்லாங்குளத்தில் தலைமுடி காணிக்கையளித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமள ராவ் தலைமையில், 17-வது முறையாக முருகப் பெருமானுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த பட்டு வஸ்திரம் மூலவருக்கும் உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மாலை 7 மணிக்கு சரவணப் பொய்கையில் தெப்பத் திருவிழா தொடங்கியது. வண்ண மின் விளக்குகளும் மலர்களும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி திருத்தணி நகரின் பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்புக்காக காஞ்சிபுரம் டிஐஜி தலைமையில் 1,600-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியமர்த்தப்பட்டனர்.

Facebook Comments Box