சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா – கொடியேற்றத்துடன் சிறப்பான தொடக்கம்

தென்காசி மாவட்ட சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத உத்திராடம் நட்சத்திர நாளில் நடைபெறும் ஆடித்தபசு வைபவம், இவ்வாண்டு கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

காலை 2 மணிக்கு நடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 2.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கோமதி அம்மன் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். காலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலா நடைபெற்றது. காலை 4.41 மணிக்கு அம்மன் சந்நிதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த விழாவில் தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் ஈ. ராஜா, கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் வி. எம். ராஜலெட்சுமி, இந்து சமய அறநிலையத் துறை குழு உறுப்பினர் தங்கவேலு, கோயில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகையா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடைபெறும். தினமும் காலை, இரவு கோமதி அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் 9-ஆம் நாளான ஆகஸ்ட் 5 அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ஆம் நாளான ஆகஸ்ட் 7 அன்று நடைபெறுகிறது.

அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்மனுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் நடைபெறும். மதியம் தங்கச்சப்பரத்தில் தவக்கோல வடிவில் கோமதி அம்மன் தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளி தவமிருக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் மாலை 6 மணிக்கு சங்கரநாராயண சுவாமியாக சிவபெருமான் ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி அளிப்பார்.

அதே இரவு 11.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு அருள் காட்சி நடைபெறும். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அறிவிப்பு

விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 8 வரை சங்கரன்கோவில் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • கோவில்பட்டி, கழுகுமலை வழியாக தென்காசி செல்லும் வாகனங்கள் குருவிகுளம் – திருவேங்கடம் – பருவக்குடி விலக்கு – தென்மலை – சிவகிரி வழியாக செல்ல வேண்டும்.
  • திருவேங்கடம் வழியாக தென்காசி செல்லும் வாகனங்களும் இதே வழித்தடத்தையே பின்பற்ற வேண்டும்.
  • திருநெல்வேலி வழியாக ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் சண்முக நல்லூர் விலக்கு – சின்னகோவிலான் குளம் – நடுவக்குறிச்சி – வீரசிகாமணி – வாசுதேவநல்லூர் வழியாக செல்ல வேண்டும்.
  • தென்காசி வழியாக விருதுநகர் செல்லும் வாகனங்கள் கடையநல்லூர் – புளியங்குடி – வாசுதேவநல்லூர் – சிவகிரி வழியாகச் செல்ல வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.
Facebook Comments Box