புத்திர தோஷம் நீக்கும் குடவாசல் கோணேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

தல வரலாறு

பிரம்மன், வேதங்களை ஒரு அமுதக் குடத்தில் வைத்திருந்தார். அப்போது பெருவெள்ளம் எழுந்து அந்தக் குடத்தை தெற்குத் திசையில் அடித்து கொண்டு சென்றது. சிவபெருமான் வேடன் வடிவில் வந்து, குடத்தின் மீது அம்பு எய்தி, உலக உயிர்களை மீண்டும் படைத்தார். அக்குடத்தின் துண்டுகள் விழுந்த இடங்களில் சிவன் சுயம்புலிங்கமாக வெளிப்பட்டார். அதில், குடத்தின் வாய்பகுதி விழுந்த இடம் தான் இன்றைய குடவாசல் (குடவாயில்) ஆகும். பின்னர் காலப்போக்கில் அந்த லிங்கம் புற்றினுள் மூடப்பட்டது.

பிற்காலத்தில் கருடனின் தாய் விநதை, சத்ருவின் அடிமையாக இருந்தாள். தாயை விடுவிக்க கருடன் தேவலோகத்திலிருந்து அமுதக் குடத்தை கொண்டு வந்தார். வழியில் இத்தலத்தில் ஓய்ந்தார். அப்போது ஒரு அசுரன், கருடனிடம் இருந்து குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன் அக்குடத்தை புற்றின் மீது வைத்து போரிட்டார். அசுரனை வென்ற பின் குடத்தை எடுக்க வந்தபோது, அது புற்றுக்குள் புதைந்து விட்டது.

அதை தனது அலகால் கீறியபோது, அதன் கீழ் சிவலிங்கம் வெளிப்பட்டது. உடனே அவர் சிவனை வணங்கினார். கருடனின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் காட்சி தந்து, அவரது தாயை மீட்டு அருளினார். அதன் பின்னர் கருடனே இங்கு சிவாலயத்தை நிறுவினார்.

கோயில் சிறப்புகள்

உயிர்களை (கோ) நேசித்து, மீண்டும் படைத்தவர் என்பதால் இங்கு சிவபெருமான் கோணேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். இவர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

அவரின் துணைவியாக பெரியநாயகி அம்பாள் (பெரிய துர்கை / பிருஹத் துர்காம்பிகை), தனித்த சந்நிதியில் தெற்கு நோக்கி துர்கை அம்சத்துடன் அருள்பாலிக்கிறார்.

இத்தலம், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் 157-வது இடத்தில் உள்ள புனித தலம் ஆகும். இங்கு புத்திர தோஷ நிவாரணத்திற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இடம் மற்றும் தரிசன நேரம்

  • இடம்: திருவாரூர் – கும்பகோணம் சாலையில், சுமார் 23 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
  • திறப்பு நேரம்: காலை 6.00 மணி – 12.00 மணி, மாலை 4.00 மணி – 9.00 மணி வரை.
Facebook Comments Box