ஆவணி மூலத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயிலில் கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நிகழ்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆக. 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக. 25-ம் தேதி சந்திரசேகரர் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலை முன்னிட்டு தங்கச் சப்பரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆவணி மூல வீதியில் எழுந்தருளினர். பின்னர் அங்குள்ள குலாலர் மண்டபத்தில் கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் நடைபெற்றது.
இதில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருவிளையாடலை கண்டு வழிபட்டனர். இன்று இரவு கற்பகவிருட்ச வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் ஆவணி மூல வீதிகளில் எழுந்தருளுகின்றனர்.
நாளை இரண்டாம் நாள் (ஆக. 27) நாரைக்கு முக்தி அளித்த திருவிளையாடல் நடைபெறும். இதில் முக்கிய விழாவான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் செப். 1-ம் தேதி இரவு 7.35 மணிக்கு நடைபெறும். அதனை தொடர்ந்து செப். 3-ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பிற்பகல் 1.35 மணி முதல் 1.59 மணி வரை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச. கிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிளையாடல் புராண வரலாறு: முற்பிறப்பில் பல புண்ணிய காரியங்கள் செய்தும், சிறிது பாவம் செய்த ஒருவன் மறு பிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்தது.
அப்போது மரத்தடியிலிருந்த சிலர் மதுரையை பற்றியும், பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் நிகழும் எனவும் பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட கருங்குருவி அங்கிருந்து மதுரைக்கு பறந்து வந்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டது. இறைவனும் குருவியின் பக்தியை ஏற்று மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். மேலும் கருங்குருவியின் பெயரான ‘எளியான்’ என்பதைக் ‘வலியான்’ என மாற்றினார் சிவபெருமான்.