தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் – புரட்டாசி மாத ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில்கள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தெரிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயன்பெற தமிழகத்தில் ஒருநாள் அம்மன் கோயில் சுற்றுலா நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் இது அமோக வரவேற்பை பெற்றது.
சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் நகரங்களில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களை தரிசனம் செய்யும் ஒருநாள் சுற்றுலா திட்டம் செப்டம்பர் 17 முதல் புதன், சனி, ஞாயிறு நாட்களில் காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும்.
சென்னையில் ஒருநாள் வைணவ கோயில் சுற்றுலாவில் 6 அல்லது 7 பெருமாள் கோயில்களை தரிசிக்க முடியும். அதேபோல் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் நகரங்களிலும் ஒருநாள் வைணவ கோயில் சுற்றுலா நடைபெறும்.
பயணிகளுக்கு மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம், சிறப்பு விரைவு தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்ய www.ttdconline.com இணையதளம், மேலும் தகவலுக்கு 044-25333333, 25333444 தொடர்பு கொள்ளலாம்.