ஞாயிறு தரிசனம்: தோல் நோய் நீக்கும் நாகப்பட்டினம் குமரன்
மெய்கண்டமூர்த்தி தல வரலாறு
18ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேசும் திறனற்ற அழகுமுத்து என்ற பக்தர் நாகை மெய்கண்டமூர்த்தி முருகன் கோயிலில் தோட்டப் பணிகளை செய்து வந்தார். அவர் குமரனுக்கான நிவேதனப் பிரசாதத்தை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் அர்த்தஜாம பூஜை முடிந்தபின், கோயில் பூட்டப்பட்ட நிலையில் அவர் உள்ளேதான் உறங்கினார். அர்ச்சகர் வழக்கம் போல பிரசாதத்தை அவருக்கு அருகில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். இரவு ஒன்று மணியளவில் பசியால் வாடிய அழகுமுத்து, பேச முடியாத நிலையிலும் சத்தம் போட்டபடி கோயிலின் உள்ளே அலைந்தார்.
அப்போது முருகன் பாலனின் உருவத்தில் வந்து, அவருக்கு பஞ்சாமிர்தம் அளித்து, பேசும் திறனை அருளினார். அதன்பின் அழகுமுத்து பல கோயில்களில் பக்திப் பாடல்கள் பாடத் தொடங்கினார். முதிர்வயதில், வைகாசி விசாக தினத்தில் சிதம்பர நடராஜர் கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் அவர் உயிர் பிரிந்தது.
அவரது ஆவி நேராக நாகை மெய்கண்டமூர்த்தி முருகன் சந்நிதிக்கு வந்து, சாயரட்சை தீபாராதனையின் போது முருகனோடு ஒன்றுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தினத்தில் ஐக்கியத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோயில் சிறப்புகள்
நாகையில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் ஒருகாலத்தில் மேகராஜனின் ஆதரவால் சிறப்பாகச் செயல்பட்டது. காலப்போக்கில், அங்கிருந்த விக்கிரகங்கள் பூமிக்குள் புதைந்து விட்டன.
பின்னர், புதுச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் கனவில் முருகன் தோன்றி, தாம் இருக்கும் இடத்தை உணர்த்தி, நாகை காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்குவீதியில் தமக்கு ஆலயம் கட்ட வேண்டும் எனக் கூறினார். அதன் அடிப்படையில் இக்கோயில் நிறுவப்பட்டது.
இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் முருகன், தோல் நோய்களை நீக்கும் தெய்வம் என பக்தர்களால் வழிபடப்படுகிறார்.
அமைவிடம் & தரிசன நேரம்
📍 நாகை – தஞ்சை சாலையில் உள்ள நாலுகால் மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது.
🕉️ தரிசன நேரம்: காலை 7.00 – 12.00 & மாலை 5.00 – 9.30 வரை.