4 வேதங்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் வலியுறுத்தல்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடைபெற்ற வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார மாநாடு நேற்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடந்த இம்மாநாட்டின் இறுதி நாளில் காலை 1,008 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, சுமங்கலி பிரார்த்தனை நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயில் இளவரசுப் பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் தலைமையிலும், சென்னை வேதாகம தேவார ஆன்மிக கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீஜெகதீஷ் கடவுள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் திருவிளக்கு பூஜையைத் தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார்.
அவர் உரையாற்றும்போது, “அம்மன் அருள் நம்மை கவசமாக பாதுகாக்கிறது. அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் அம்பாளை தரிசிப்பது சிறப்பானது. வாழ்க்கை நடத்தும் வழியிலும், இல்லறம் நடத்தும் முறையிலும் பாரத தேசம் முன்னுதாரணமாக விளங்குகிறது. கலாச்சாரத்தை வளர்த்தால் நாடும் வளரும். அதற்கு குழந்தைகள் ஆன்மிகக் கல்வியிலும், கோயில் வழிபாட்டிலும் வளர்க்கப்பட வேண்டும்” என்றார்.
பின்னர் ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் பேசுகையில்:
“திருவாரூரில் பிறந்தாலும், காசியில் இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள். ஆனால் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும். இங்கு நடந்த மாநாடு அபூர்வமானது. மகரிஷிகள் நமக்கு கொடுத்த ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை மீண்டும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குழந்தைகள் அவற்றை கற்றுக்கொள்வதே கலாச்சாரப் பாதுகாப்புக்கு அடிப்படை. வெளிநாடுகளில் கூட இவை படிக்கப்பட்டு வாழ்வில் பின்பற்றப்படுகின்றன. நம் பண்பாட்டை காத்தால் அனைத்தும் கிட்டும். சபரிமலை மகர ஜோதி, வடலூரில் வள்ளலார் ஏற்றிய தைப்பூச ஜோதி எல்லாம் முக்கியமானவை; ஆனால், அவற்றையும் மிஞ்சும் அருட்பெரும் ஜோதியாக திருவண்ணாமலை கார்த்திகை தீபமே விளங்குகிறது. இந்த ஆன்மிக ஒளியை உலகெங்கும் பரப்ப வேண்டும்” என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், தொழிலதிபர் பி.சக்தீஸ்வரன், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து இளவரசு பட்டம் பி.டி.ஆர். கோகுல் குருக்கள் எழுதிய “அருணாச்சல தீர்த்த மகிமை” நூல் வெளியிடப்பட்டது.